மேலூர் அருகே கோவில் விழாவில் 51 ஆட்டுகிடாய், 100க்கும் மேற்பட்ட சேவல்களை அடித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கமகம கறிவிருந்து நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குநாவினிபட்டி–சத்தியபுரம் நான்கு வழிச்சாலை எதிரில், தோப்புக்குள் இலந்தைமரத்தடியில் வீற்றிருக்கும் அருள்மிகு முத்துபிள்ளையம்மன் ஆலயத்தில், சிவராத்திரியை முன்னிட்டு மாசி கெளரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் மேலூர், கூத்தப்பன்பட்டி, நாவினிபட்டி, வடக்கு நாவினிபட்டி, சத்தியபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்தினர்.
விழாவில் முக்கிய நிகழ்வாக சாமியாடி பெண் ஒருவர், கோவில் பகுதியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த மல்லிகை பூக்களில் சர்ப்பவடிவில் ஆடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 51 ஆட்டுகிடாய்கள், 100க்கும் மேற்பட்ட சேவல்களை பலிகொடுத்து, அதனை அங்குள்ள தோட்டத்துக்குள்ளேயே சமைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கமகமவென கறிவிருந்து தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. சுற்றுவாரத்திலிருந்து வந்த அனைத்து கிராமத்தினரும் கறிவிருந்தில் கலந்துகொண்டனர்.