தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்கள் மதிப்பெண் கூட்டலில் தவறு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய இந்த ஆசிரியர்கள் மதிப்பெண்ணை கூட்டும்போது பிழை செய்திருப்பதை தேர்வுகள் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.
பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதில் 30 சதவிகித விடைத்தாள்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பெண்களை கூட்டும்போது 10 மதிப்பெண்கள் அளவிற்கு பிழை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, 100 மதிப்பெண்களுக்கு 72 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாக பிழையாக மதிப்பெண் போட்டது உள்ளிட்ட தவறுகளும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 500 ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது