கோவையில் 13வயது சிறுமி வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி மற்றும் நெகிழி கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
கோவையைச் சேர்ந்த அந்த சிறுமி அவ்வப்போது வயிறு வலிப்பதாக கூறியதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் வித்தியாசமாக தெரிந்ததையடுத்து அதனை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது, சிறுமியின் வயிற்றில் அரைகிலோ அளவுக்கு தலைமுடியும் ஷாம்பு பாக்கெட்டுகளும், நெகிழி கழிவுகளும் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.
மனவளர்ச்சி குன்றிய சிறுமி என்பதால் தலைமுடி உள்ளிட்டவற்றை வாயில் போட்டு விழுங்கியிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகளை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.