மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அபயாம்பிகை யானை வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து உற்சாகமாக கொண்டாடினர்.
மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் ஆருளப்பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அபயாம்பிகை யானை மூன்று வயது குட்டியாக அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாகவும், மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களிலும் முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் இன்று பொன்விழாவாக கொண்டாடினர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யானை மேல் புனிதநீர் கொண்டுவரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனிதநீர் கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. காலில் கொலுசு கழுத்தில் அடையாள சங்கிலி மற்றும் டாலர் அணிவிக்கப்பட்டு முகபடாம் மற்றும் புத்தாடைகளுடன் யானை புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது.
தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம், பொரிகடலை, பழ வகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள், பன் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து பாசத்துடன் யானைக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில், "காடுகளில் உள்ள யானைகள் உணவு இல்லாமல் நகரங்களில் உள்ள வீடுகளில் புகுந்து சேதப்படுத்துகிறது. திருக்கோயில்களை கட்டி வைத்து அரசர்கள் கோயிலுக்கு யானைகளை கொடுத்துள்ளனர். அதுபோல் தமிழக அரசும் அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி பாதுகாக்க வேண்டும். சிவனை யானை, பூனை, குரங்குகளும் பூஜித்துள்ளன. அதுபோல் மயிலாடுதுறையில் மயில் சிவனை பூஜித்த சிறப்பான தலம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம். இங்கே அவையாம்பிகை என்ற பெயர் சூட்டப்பட்ட பெண் யானை கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆயுள் ஹோமம் கலசபிஷேகம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அனைவரும் இறையருள் பெற வேண்டும்” என்றார்.