சிறுவனை கொன்ற விவகாரத்தில் ஜாமினில் வந்த இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், பெண் உட்பட 5 பேர் சரண் அடைந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த நாகராஜ் (28) என்ற இளைஞர் அங்குள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29-ஆம் தேதி அவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொன்றது. இது தொடர்பாக, திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக் தகவல்கள் வெளியானது.
(கணவர் கார்த்திகேயன், மகன் ரித்தேஷ் சாய்-யுடன் மஞ்சுளா)
கொல்லப்பட்ட நாகராஜ் கடந்த ஆண்டு, சென்னை நெசப்பாக்கத்தில் தங்கி கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. மஞ்சுளாவின் இந்த உறவை நேரில் பார்த்த அவர் மகன் ரித்தேஷ் சாய் (10) தந்தையிடம் தெரிவித்துள்ளான். அவர் மஞ்சுளாவை கண்டித்தார். இதனால் அவர் அந்த உறவை கைவிட்டார். ஆத்திரமடைந்த நாகராஜ், சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திக் கொன்றார். இவ் வழக்கில் நாகராஜை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 9 மாதங்களாக சிறையில் இருந்த நாகராஜ், கடந்த வாரம் ஜாமினில் வந்தார். சென்னையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று செல்போன் கடையில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்தே இந்த கொலை நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மகனை கொன்ற ஆத்திரத்தில் இருந்த மஞ்சுளா, கூலிப்படையை ஏவி, தனது காதலன் நாகராஜை பழி வாங்கியது தெரியவந்தது.
மஞ்சுளாவை போலீசார் தேடி வந்த நிலையில், ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்றத்தில் மஞ்சுளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த தினேஷ் குமார்(19), ஷியாம் சுந்தர்(20), சந்தோஷ் குமார்(19), சரவணன்(20) ஆகியோர் சரண் அடைந்தனர்.
(துப்பாக்கி வழக்கில் கைதானபோது மஞ்சுளா)
வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரையும் வரும் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மஞ்சுளா மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரூ.1 லட்சத்துக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிய வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.