திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா சே.நாச்சியார் பட்டு பகுதியை சேர்ந்த தம்பதி ராமஜெயம் - இரத்தினா. இவர்களுக்கு ராஜலட்சுமி (5), தேஜா ஸ்ரீ (இரண்டரை வயது) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளன. ராமஜெயம், கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் உள்ள தன் மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின் அங்கிருந்த உறவினரான ராஜேஷ் (29) என்பவரை அழைத்து கொண்டு, தன் குடும்பத்துடன் நேற்று ஊர் திரும்பியுள்ளார்.
அப்படி நேற்று இரவு சொந்த ஊருக்கு சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக இவர்கள் வந்து கொண்டிருந்தபோது, காஞ்சிபுரத்தை அடுத்த சித்தேரிமேடு பகுதியை அடைந்துள்ளனர். அங்கு அவர்களின் TATA ARIA காரின் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இரும்பு லோடுடன் நிறுத்த வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நிகழ்விடத்திலேயே ராமஜெயத்தின் மனைவி இரத்தினா, குழந்தைகள் ராஜலட்சுமி (5 வயது), இரண்டரை வயது குழந்தை தேஜா ஸ்ரீ, ராஜேஷ் (29) என நான்கு பேரும் உயிரிழந்தனர். 3 மாத குழந்தையும், ராமஜெயமும் காரில் சிக்கி தவித்து வந்த நிலையில் உடனடியாக இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலுசெட்டி போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மூன்று மாத குழந்தையும் வழியிலேயே உயிரிழந்துவிட்டது. ராமஜெயம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாலு செட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.