வேப்பூர் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.
அப்போது திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி மணல் ஏற்றிசென்ற தெலங்கானா பதிவு எண் கொண்ட லாரியொன்று, அங்கு அதிவேகமாக வந்துள்ளது. இதில் முன்னே நின்றிருந்த கார் மீது அது மோதியது. அந்த விபத்தில், கார் அதற்கு எதிரில் இருந்த லாரியின் மீது மோதியது. இதனால் அந்த கார், இரண்டு லாரிகளுக்கும் இடையில் நொறுங்கி சிக்கிக் கொண்டது.
இதில், காரில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் இந்து காலனி பகுதியைச் சேர்ந்த விஜய் வீரராகவன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு லாரி, ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து அடுத்தடுத்து மோதிக் கொண்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூர் போலீசார், திட்டக்குடி மற்றும் வேப்பூர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இரண்டு மணி நேரமாக போராடி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஒருமணி நேரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.