செய்தியாளர்கள்: அன்பரசன், சாந்தகுமார்
சென்னை பள்ளிகரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபானகூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அதன் அருகே இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பள்ளிகரணையை சேர்ந்த பிரவீன் (26), என்பதும், கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஜல்லடையாம்பேட்டையை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கோபத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக மதுபானக் கூடத்தின் வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் மூன்று நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது.
சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண் வீட்டார் செய்த ஆணவக் கொலை பள்ளிகரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை பள்ளிகரணை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடிப்பதற்காக பள்ளிக்கரணை உதவி ஆணையர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பிரவீன், கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கரணை பகுதியில் சாம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏ3 குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து விஷ்ணு என்பவர் நேற்றிரவு தினேஷுக்கு ஃபோன்-கால் செய்து ஷர்மியின் அண்ணன் உன்னுடன் பேச விரும்புவதாகக் கூறி மதுபான பாருக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பிரவீனை சுற்றி வளைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 307 கொலை முயற்சி என பதிவு செய்த வழக்கை 302 IPC கொலை வழக்காக மாற்றி தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் என்ற பிரிவில் பதிந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.