வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் நீலகிரியில் மடக்கி பிடித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம், பொருட்களை பரிசாக கொடுப்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்டதாக கூறி, ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிக்கியிருக்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே அதிமுக சார்பில் 500 ரூபாய் பணம், வேட்டி சேலை ஒரு தட்டு போன்றவை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில், வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டுவந்த புகாரில், 4ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில் அரசுத் திட்டத்தின்கீழ் கோழிக்குஞ்சுகள் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.