மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 அடி அகலமும் கொண்டது. கல் சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையின் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல் சிற்பத்தை தற்போது மக்கள் மாலைக்கோவில் என்று வழிபடுகின்றனர்.
நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்ட மதுரையை சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட வரலாற்று தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று காணப்படுகிறது. இதுபோன்ற கற்சிற்பங்களை பாதுகாத்தால் நமது வரலாற்று சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.