கோவையில் சாமினி என்ற 4 வயது குழந்தை காணாமல் போய் 5 நாட்களாகியும் போலீஸார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - கவிதா தம்பதி. விசைத்தறி கூலித்தொழில் செய்து வரும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகளான சாமினி (4) கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வீட்டருகே உள்ள கோவில் திடலில் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் குழந்தை வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் தேடியுள்ளனர்.
குழந்தையை காணவில்லை என பதறிப்போன அவர்கள் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஊர் பகுதிகளிலும், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளிலும் காவல்துறையினர் தேடி பார்த்தனர். ஆனால் 5 நாட்களாகியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தங்களது குழந்தை கிடைக்காத சோகத்தில் பெற்றோர்கள் கூலி வேலைக்கு கூட செல்லாமல் தொடர்ந்து குழந்தையை தேடும் பணியில் கண்ணீர் மல்க ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குமாரபாளையம் முழுவதும் சாமினிக்கு என்னாச்சு ? என்ற குரல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.