திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்-தேடும்பணி தீவிரம்

திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்-தேடும்பணி தீவிரம்
திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்-தேடும்பணி தீவிரம்
Published on

மசினகுடி அருகே கோவிலுக்கு சென்று திரும்பும் போது திடீரென வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதற்காக எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர், பேர்கனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நேற்று ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிலுக்குச் சென்றவர்கள் மாலை மீண்டும் வீடு திரும்பும் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய நான்கு பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல் மற்றும் வனத் துறையினர் ஊர் மக்களோடு சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரம் ஆற்றுக்கு மறுபுறம் பலர் சிக்கிக் கொண்டு தண்ணீரை கடக்க முடியாமல் வனப் பகுதிக்குள் இருந்தனர். இதையடுத்து கூடலூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவு வரை தண்ணீரில் அடித்து சொல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி அதிகாரிகள் திரும்பினர். தற்சமயம் காலை முதல் மீண்டும் தண்ணீரில் அடித்து சொல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com