துபாய் கேளிக்கை விடுதியில் பார் டான்சர்களாக நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட கோவையை சேர்ந்த 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவையைச் சேர்ந்த 4 பெண்கள் துபாயில் உள்ள ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காகச் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்தப் பெண்களும் அதை நம்பி அங்கு சென்றுள்ளனர். ஆனால் வேலை கொடுக்காமல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களை அறையில் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் பார் டான்சர்களாக நடனமாட கட்டாயப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, அந்த 4 பெண்களில் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு இந்த விவரங்களை வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே வெளிநாட்டிற்காக வேலைக்கு செல்ல எண்ணும் பெண்கள், வேலை குறித்த முழு விவரம், பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்களை கவனித்துக்கொண்டு அதன்பின் வேலைக்கு சென்றால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.