தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு, கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். கடந்த மே 30-ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 14-ஆம் தேதி, முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருந்த தருணத்தில், நேற்று இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
அவர்களில் தமிழகத்தில் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஜெயந்திபூர்வஜா, ரோகித், ராஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.