வேலூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த மேல்வெங்கடாபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில், கடந்த 2 ஆண்டுகளாக சிலர் கொத்தடிமைகள் இருந்துள்ளனர். இதுதொடர்பாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் வெங்கடாபுரம் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் 4 பேரிடமும் போர்வெல் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக ஊதியம் இல்லாமல், அடித்து துன்புறுத்திவேலை வாங்கப்பட்டு வருவது தெரியவந்தது. அந்த 4 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றனர். அத்துடன் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை கொத்தடிமைகளாக பணியில் ஈடுபடுத்தி வந்த நரசிம்மலுவை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது மீட்கப்பட்ட 4 பேரையும் அவர்களது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் தெரிவித்தார்.
(தகவல்கள்: குமரவேல், புதிய தலைமுறை செய்தியாளர், வேலூர்)