சென்னை புழல் பகுதியை அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேந்திரன் - நிர்மலா தம்பதியர். இவர்களது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு பாஸ்கரன், கணேசன் ஆகிய 2 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அங்கு தொட்டியை சுத்தம் செய்ய, இருவரும் கழிவுநீர் தொட்டியில் முழுவதுமாக இறக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, திடீரென விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். நீண்ட நேரமாக இருவரும் வெளியே வராத நிலையில், புழல் போலீசாருக்கு அக்குடும்பத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின் பேரில் அங்கு சென்ற செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டியில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புழல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தன்று மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீண்டும் ஓர் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.