செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் மற்றும் பாதுகாப்பு பிரமாணம் செய்து வைத்தார். செந்தில் பாலாஜி, நாசர், ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சரியாக 3.30 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் அமைச்சராக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து செந்தில்பாலாஜியும், கோவி.செழியனும், ஆவடி மு.நாசரும் பதவியேற்றனர்.
இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் கலந்துகொண்டனர். ஆளுநர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைமைச் செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சரவையில் மீண்டும் சேர்ந்துள்ள ஆவடி சா.மு. நாசர் ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். தொண்டர் ஒருவரை நோக்கி கல் வீசிய வீடியோ வைரலாக பரவிய சூழலில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு தற்போது இடம் கிடைத்திருக்கிறது.
இதேபோல், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால், முதலில் இலாகாவையும் பின்னர் அமைச்சர் பதவியையும் இழந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே பார்த்து வந்த துறையான மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு - ஆயத்தீர்வை துறைகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள கோவி. செழியனும் பொன்முடியைப் போன்றே முனைவர் பட்டம் பெற்றவர். இவர், ஆளுநர் மாளிகையுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பாரா அல்லது ஆளுநருடன் மோதல் போக்கான பொன்முடியின் வழியையே பின்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் ஆர். ராஜேந்திரனும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனையடுத்து, புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு யார் யாருக்கு எந்தெந்த துறைகள் என்ற விபரமும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துசாமி இடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தான் செந்தில் பாலாஜி வசம் சென்றுள்ளது.
பதவியேற்பு முடிந்தவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அமைச்சர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.