லோன் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைக்கூறி மோசடி செய்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு நபர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் அருணாச்சலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை லோன் வாங்கித்தருவதாக மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி லட்சுமி லோன் பெற்றுக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். லோனை பெற்றுக்கொள்வதற்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.31,500 செலுத்த வேண்டும் என மர்ம நபர்கள் தொலைபேசியில் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை நம்பி லட்சுமி இன்சூரன்ஸ் தொகை 31,500 ரூபாயை கூகுல் பே மூலமாக செலுத்தி இருக்கிறார். சில மாதங்கள் கடந்த பிறகு அந்த தொலைபேசியில் எந்த விதமான அழைப்பும் இல்லாததால், இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக எண்ணூர் பகுதியைச் சேர்ந்த வினிதா, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தெரேசா, பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பால் ஜோசப் மற்றும் கேகே நகரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த நான்கு நபர்களும் தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், அப்பொழுது இதுபோன்ற தொலைபேசி எண்ணை எடுத்து லோன் வாங்கும் விருப்பம் உள்ளவர்களை கண்டறிந்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 நபர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.