தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் 3ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலி; அந்தக் கொடூர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் 3ஆம் ஆண்டு நினைவுநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அந்தக் கொடூர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்ட குறிப்பிட்ட சில வழக்குகளை அரசு திரும்பப் பெற்றிருப்பது மட்டும் போதாது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான முதன்மை வழக்கினை துரிதப்படுத்தி மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் தமிழக அரசு வழிகாண வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைப்பதோடு, அந்த ஆணையம் விரைவாக தமது முழு விசாரணையையும் நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடுகள் வழங்கப்படுவது ஆறுதல் அளித்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்குவதும், எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதுமே அதில் கொல்லப்பட்ட 13 உயிர்களுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார்