கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட டெங்கு - பறிபோனது பெண்ணின் உயிர்

கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட டெங்கு - பறிபோனது பெண்ணின் உயிர்
கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட டெங்கு - பறிபோனது பெண்ணின் உயிர்
Published on

நாகையில் டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவரது குடும்பம் சோகக் கடலில் மூழ்கியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கீழநாஞ்சில்நாடு, முத்தாட்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி சத்யாதேவி (37). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சத்யாதேவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக 3 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். 

ஆனால் தொடர்ந்து காய்ச்சல் குறையாததால் சத்யாதேவியை அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கும் காய்ச்சல் குறையாத காரணத்தால் கடந்த 1ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்ததோடு, ரத்த அணுக்கள் மிகக்குறைவாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

இந்நிலையில் இன்று சத்யாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாலை 5 மணியளவில் சத்யாதேவி உடலை அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக சத்யாதேவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். இதனால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழிதடத்தில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com