324 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் - கமிஷனர் மகேஷ்குமார்
324 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக கண்காணிப்போம் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் புதிய ஏசி டெக் வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் விதமாக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் செண்டர் Phase-II மையத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று துவக்கி வைத்தார். இந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போலீசாருடன் வீடியோ காலில் காவல் ஆணையர் பேசி உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 324 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி இந்த வளாகத்தில் காவல் துறையினருக்கென கோவிட் கேர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இங்கு காவல் துறையினருக்கு மூச்சுப் பயிற்சி அளிக்க வல்லுனர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 34 காவலர்கள் மற்றும் அவர்களின் காவலர்கள் குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 39 பேர் தற்போது இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரம் பேருக்கு மேல் காவல்துறையில் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு பிரச்சினை சீரானபின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி நடக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்குப் பாதுகாப்பு என மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இது தவிர்த்து வெளியில் தேர்தல் கொண்டாட்டங்களை கண்காணிக்க கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறினார்.