கமுதி அருகே 3000 ஆண்டு பழமையான சிறிய வகை மண் குவளைகள், முதுமக்கள் தாழியை அப்பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியின்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் கிராம மக்கள் அதனை பழைய மண்பானைகள் என கருதி, பொருட்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தற்போது பெய்த மழையின்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரும் பட்டப்படிப்பு பயின்ற இளைஞருமான முருகானந்தம் சிதைந்து கிடந்த மற்றும் அருகில் புதைந்து கிடந்த முதுமக்கள் தாழிகளை தோண்டி பார்த்தபோது, வித்தியாசமான நிறத்தில் மண், அதனுள் சிறிய வகை கருப்பு சிவப்பு நிறத்தில் மண் குவளைகள், எலும்புக்கூடுகள், பட்டையான இரும்பு கம்பிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து முருகானந்தம் தொல்லியல் ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்தபோது இந்த பானைகள், மண் குவளைகள் 3000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்ததாகக் கூறுகிறார்.
மேலும் செய்யமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தால் கூடுதலாக தகவல்கள் கிடைக்கும் என்றும், தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை கமுதி பகுதி மாணவர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், எனவே மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு தலையிட்டு செய்யாமங்கலம் பகுதியில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.