சிக்னல்களில் 300 மீட்டர் சுற்றளவில் விளம்பரங்கள் வைக்க நீதிபதிகள் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
கோவை நுகர்வோர் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் தொடர்ந்த வழக்கில் சாலைகளின் நடுவிலும், குறுக்கிலும், குறிப்பாக சிக்னல்களிலும் சாலை விதிகளுக்குப் புறம்பாக விளம்பர பலகைகள் வைக்கப்படுவதுதான் பல விபத்துகளுக்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளின்படி சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் விதமாக உள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விதிகள்தான் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும் என்றும், விதிமீறி வைக்கப்படும் விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே உரிமம் பெற்றுதான் விளம்பரம் செய்யப்பட்டதாகவும், அதேசமயம் இந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டால் அதன் முதலீடு மீதான லாபம் கேள்விக்குறியாகும் என விளம்பர நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள். தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் 300 மீட்டர் சுற்றளவில் விளம்பரங்கள் வைக்க தடை விதித்தனர். மேலும் ஏற்கனவே விளம்பரம் வைக்க அனுமதி கொடுத்திருந்தால், அதற்கான உரிம காலம் முடியும் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்கக்கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளனர்.