செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம், வாகனத்தில் கொண்டு சென்ற பொருள்களுக்கான பில்களையும் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் பெற்று ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய பில் இருந்துள்ளது. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும், தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை பாதுகாப்பாக சீல் வைத்து ஓசூர் சார்நிலை கருவூல அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.