கொரோனா எதிரொலியால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னையை கண்காணிப்பதற்காக 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நேற்றிரவு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் வெளியே செல்வதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கை கடைபிடிப்பதை கண்காணிக்க 30 பறக்கும் படைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ஊரடங்கு நிலையை கண்காணிக்க 30 பறக்கும் படைகளை அமைத்துள்ளோம் எனவும், இதில் மாநகராட்சி, வருவாய்த் துறை, காவல்துறையை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் எனவும் கூறினார். இந்த பறக்கும் படையினர் ஊரடங்கை அத்துமீறுபவர்கள் யார் என்பதனை கண்காணிப்பார்கள் என தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களை கண்காணித்து வருவதாகவும் அவர் அறிவித்தார். உணவு தட்டுப்பாடு வந்து விடக்கூடாது என்பதற்காக மளிகைப் பொருட்கள் கடை திறந்து இருக்கும் எனவும், ஆனால் சமையல் செய்து விநியோகம் செய்யக்கூடாது எனவும் அவர் கூறினார். தன்னார்வலர்கள் கெட்டுப்போகாத பொருட்களை மாநகராட்சி அலுவலகத்தில் கொடுக்கலாம் எனவும், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் எனவும் தெரிவித்துக்கொண்டார்.