கன்னியாகுமரியில் மின்தடையை சரிசெய்யச் சென்ற 3 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள மலையோர கிராமமான குற்றியாரில் மின்கம்பங்கள் அடிக்கடி பழுது ஏற்படும் எனத் தெரிகிறது. இதனால் மின்தடை ஏற்பட்டு மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மின்கம்பத்தில் ஏற்படும் பழுதை சரிசெய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகவும், அதன் காரணமாக பல நாள்கள் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கிராம மக்களே மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்தது புதிய தலைமுறை நடத்திய களஆய்வில் தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதை அடுத்து, பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் அருகேயுள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதா எனப் பார்ப்பதற்காக குற்றியாரைச் சேர்ந்த சுபாஷ், சஜின், மன்மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மின்மாற்றியில் இருந்து கசிந்த மின்சாரம் தாக்கியதில் மூவரும் உயிரிழந்தனர். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே 3 பேரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றியார் மக்கள் குற்றம்சாட்டினர்.