மந்திர சக்தி அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையால் 3 வயது சிறுமியை நரபலி கொடுத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, முருகாயி தம்பதியின் மகள் ஷாலினி. இவரை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் காணவில்லை. பதட்டமடைந்த உறவினர்களும், கிராம மக்களும் ஷாலினியை பல இடங்களில் தேடி வந்தனர். விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவர்களுக்கு, ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக வந்த செய்தி பேரிடியாய் இருந்தது.
அங்கு சென்று பார்த்தபோது ஷாலினி கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தது அவர்களுக்கு தெரிய வந்தது. சிறுமி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படாததால், அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவலர்கள் சந்தேகித்தனர். அந்தக் கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்கள், அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. ஷாலியின் கொலை காவலர்களை மேலும் குழப்பமடையச் செய்தது. இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் பெண் மீது காவலர்களுக்கு சந்தேகம் வலுத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை செய்தபோது, பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
விசாரணையின் படி மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சின்னப்பிள்ளை, பெண் குழந்தையை நரபலி கொடுத்தால், மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் இருந்திருக்கிறார். அதனால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஷாலினியிடம் ஆசை வார்த்தைகள் பேசி, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமி ஷாலினியை பிளேடால் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சின்னப்பிள்ளை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.