திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கட்சிகளோடு இணைந்து ஒன்றிய தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதால் 2 ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் வெற்றிபெற்ற ஒன்றிய தலைவரின் கணவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க வந்தனர். அதில் திமுக சார்பில் 2 குழுக்களாக தேர்தலில் போட்டியிட்டனர். 6வது வார்டு வெள்ளக்குட்டை பகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா பாரி மற்றும் 7வது வார்டு கொத்தகோட்டை பகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காயத்ரி பிரபாகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைதொடர்ந்து சங்கீதா பாரிக்கு ஆதரவாக திமுகவில் 5 பேர், அதிமுகவில் வெற்றி பெற்ற 4 பேர், பாட்டாளி மக்கள் கட்சியில் வெற்றிபெற்ற 2 பேர், சுயேட்சை ஒருவர் என 12 பேர் வாக்களித்தனர். இதில் எதிர்த்தரப்பில் போட்டியிட்ட காயத்ரி பிரபாகரனுக்கு ஆதரவாக இருந்த திமுக உறுப்பினர்கள் 6 பேர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து 12 பேர் ஆதரவுடன் சங்கீதா பாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவி வெற்றி பெற்றுள்ளதால் இதற்கு காரணமாக இருந்த ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிவேல் மற்றும் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஞானவேலன் ஆகியோரும் தற்போது ஒன்றிய தலைவராக வெற்றி பெற்றுள்ள சங்கீதா பாரி கணவர் உள்ளிட்ட 3 பேரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.