செய்தியாளர்: புருஷோத்.V
நெல்லை அருகே திடியூரில் உள்ள பிஎஸ்என் கல்லூரிக்கு பின்புறம் செல்லும் தாமிரபரணி நம்பியார் கரிமினியாறு வெள்ளநீர் கால்வாயில் குளிக்கச் சென்ற அருண்குமார், நிகில் மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகிய மூன்று பிளஸ் டூ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு. மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள ஜோதி புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேர் இன்று தங்களது வகுப்பு தோழன் ஒருவரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்காக முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுவூர்பட்டி என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து விழா முடிந்த நிலையில், மாணவர்கள் அனைவரும், திடியூரில் உள்ள தாமிரபரணி -நம்பியாறு -கருமேனியாறு -நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாயில் குளித்துள்ளனர்.
அப்போது மாணவர்கள் அருண்குமார், நிகில் மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து உடன் வந்த மாணவர்கள் இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்கவே அவர்கள் கால்வாயில் இறங்கி தேடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினரும் கார்வாயில் இறங்கி தேடினர். இதில், அருண்குமார், நிகில் மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகிய மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.