மதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர், கட்டச்சோலைப்பட்டி, பழையூர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம கும்பல் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறி செய்வது தொடர்கதையாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று பழையூர்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை சில இளைஞர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி, ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கீழவளவு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மன்றமலைப்பட்டி கண்மாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்ற மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கிராம மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த 2 அடி நீளமுள்ள கத்தியை கண்மாய்க்குள் வீசியுள்ளனர். அத்துடன் தாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும், முன்னுக்குப் பின்னாக மிரட்டும் தொனியிலும் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் கீழவளவு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் வசந்தி மற்றும் தனிப்படை காவலர் பரசுராம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து அந்த இளைஞர்களை மீட்டனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், பழனிக்குமார் மற்றும் வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த லிங்கம் என்பது தெரியவந்தது, இவர்கள் மேலூர், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.