செய்தியாளர்: I.M.ராஜா
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யா (19) மற்றும் பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் நவீன் (19) ஆகிய இருவரும் பள்ளிப் பருவ காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர்.
இருவருமே வெவ்வேறு சாதிப்பிரிவை சேர்ந்தவர்கள். திருப்பூரில் இருவரும் இணைந்து பணியாற்றியதாக தெரிகிறது. இந்நிலையில் நவீனும், ஜஸ்வர்யாவும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு தேனி அருகே வீரபாண்டி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அத்திருமண வீடியோ ஐஸ்வர்யா, நவீனின் சொந்த ஊர்களில் வாட்ஸ் ஆப்பில் பரவி வந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் திருப்பூர் பல்லடம் போலீசில் மகளை காணவில்லை என புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி பல்லடம் போலீசார், ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாரிடம் நவீன் கேட்டபோது, “ஐஸ்வர்யாவின் தந்தை அவரை காணவில்லை என புகார் அளித்த நிலையில் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்கிறார்கள். நீ அவர்கள் கண்ணில்பட்டால் அடித்து விடுவார்கள்” என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டதாக நவீன் நண்பர்கள் அவருக்கு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நெய்வவிடுதி, பூவாளூர் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நெய்வவிடுதியில் உள்ள சுடுகாட்டில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் அப்பா பெருமாள், அம்மா ரோஜா ஆகியோரை கைது செய்த போலீசார், பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா, இருவரையும் வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் நெய்விவிடுதி கிராமத்தைச் சேர்ந்த உறவினர் சின்ராசு (31), செல்வம் என்ற திருச்செல்வம் (39), தாய்மாமன் முருகேசன் (34) ஆகிய மூன்று பேர் கைது செய்த போலீசார், இன்று பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனால் இன்றும் பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாகவே காணப்படுகிறது.