நாகையில் டாஸ்மாக் கடை ஊழியரை முகமூடி அணிந்த மர்மநபர்கள் அரிவாளால் தாக்கி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில் நேற்றிரவு 9.30 மணியளவில், சூபர்வைசர் பாஸ்கரன், சேல்ஸ்மேன்கள் பிரபாகரன், லட்சுமணன் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது கைகளில் பட்டாக் கத்தியுடன் முகமூடி அணிந்த வந்த மூன்று பேர், கடையில் மது வாங்கிக் கொண்டிருந்தவர்களை மிரட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் விற்பனையாளரை தள்ளி விட்டு ஒருவர் கடைக்குள் நுழைய, மற்ற இருவரில் ஒருவர் வாசலில் பட்டாக் கத்தியுடன் காவலுக்கு நின்றார். மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்தார். கடைக்குள் நுழைந்த கொள்ளையன், ஊழியரை பட்டாக்கத்தி முனையில் மிரட்டி பணத்தை கேட்டுள்ளான்.
விற்பனை பணத்தை கொடுத்து அனுப்பி விட்டதாக ஊழியர் கூற, கல்லாவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையன் எடுத்துக் கொண்டான். பணம் குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன், ஊழியர் பாஸ்கரனை அரிவாளால் தாக்கியுள்ளான். இதில் பாஸ்கரன் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய கொள்ளையன் மற்றும் பாதுகாப்புக்காக நின்றிருந்தவன், தயாராக காத்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் டாஸ்மாக் கடைக்கு வருவதில் இருந்து வெளியேறும் வரையிலான சம்பவங்கள் அனைத்தும், அங்குள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கேமரா பதிவை வைத்து தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.