செய்தியாளர் சுரேஷ்குமார்
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொன்னம்மாள் வீதியில் கார்த்திக், சத்திய பிரியா தம்பதியினர் வசித்து வரும் வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இத்தம்பதியினருக்கு உறவினரான சரவணகுமார் என்பவருக்கு நம்பியூரில் சொந்தமாக பட்டாசு கடை ஒன்று உள்ளது. ஆனால், கோயில் திருவிழாவிற்காக திருப்பூரில் வைத்து பட்டாசுகளைத் தயாரித்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணகுமார் பட்டாசு தயாரிப்புக்கான உரிமத்தை ஈரோட்டில் பெற்றிருந்த நிலையில், சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து, பட்டாசுகளை தயாரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, அதனை ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கும் பணியை மேற்கொண்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வெடி தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
விபத்து நடந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கூறுகையில், வெடி விபத்தின்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், உடல் சிதறி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் மேலதிக தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். குமார், 9 மாத குழந்தையான ஆலிய செர்ரின் மற்றும் உடல் சிதறிய நிலையில் பெண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் சிதறி உயிரிழந்த பெண் யாரென தெரியவில்லை என்றும் அடையாளம் காணும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.