வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்ததது.
பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை கடந்த 11 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதனால் வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.