அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைத்தல் மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துவது குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உத்தரவிட்டார். முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறக்கப்பட்டது. அரசு கேபிள் தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்ததால் மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது துறையை தற்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அரசு கேபிள் டிவிக்கு புதிதாக கேபிள் அமைத்தல், கேபிள் இணைப்பு தரத்தை மேம்படுத்த 3 அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், வேலுமணி, உதயகுமார் ஆலோசனை செய்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி அமைத்த கேபிள்களை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.