அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம், கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றிரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி உலா புறப்பட்டது. அப்போது பக்தர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிரேனில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவிக்க முயன்றார்.
இந்நிலையில், திடீரென கிரேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கீழ் வீதி கிராமத்தைச் சேர்ந்த முத்து (40), அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதும் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (45) ஜோதிபாபு (17) ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவர் திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நெமிலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் திருவிழாவில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.