மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) நிர்வாகத்தில் தினசரி 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சாத்தமங்கலம் ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 1.93 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் மதுரை நகர் மற்றும் புறநகரைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ஆவின் பால் டெப்போக்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள ஆவின் பால் டெப்போக்களுக்கு தாமதமாக பால் விநியோகம் செய்யப்படுவதால் முகவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான பீ.பி.குளம், முல்லைநகர், ஆலங்குளம், கோசாகுளம், ஆனந்தம்நகர், பனங்காடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட பால் டெப்போ முகவர்களுக்கு தொடர்ச்சியாக காலை 4 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய பால் பாக்கெட்டுகளை காலை 7.15 மணிக்கு விநியோகம் செய்யப்பட்டது.
ஆவின் பால் டெப்போக்களுக்கு தாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டது. காலை 4 மணி முதல் கடும் குளிரிலும் பெண்கள், முதியவர்கள் என பால் டெப்போ முகவர்கள் சாலை ஓரத்திலயே காத்துக் கிடந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பால் முகவர்கள சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணை முன்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.