டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மதுரை கிளையில் 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
அவற்றில் சில மனுக்களை மே 6-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு மதுபான கடையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதித்தது. ஆனால் நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த கூடுதல் மனுவை மே 8ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், அனைத்து கடைகளை மூடவும், ஆன்லைன் மற்றும் ஹோம் டெலிவரி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதேபோல மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி டாஸ்மாக் மதுபான கடையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டதுடன், இரு வழக்குகளையும் சென்னையில் உள்ள வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
ஆதார் கட்டாயம், மின்னணு முறையில் பணம் பெற வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடியது போன்ற இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் பிரதான மனுதாரர்கள் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் மே 12ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி சாஹி தலைமையில் முழு அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமர்வு 12 வழக்குகளையும் மே 14ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு முழு அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரிக்கிறது.