மதுரை சோழவந்தான் அருகே வைகையாற்றில் 3 அடி உயரமுள்ள மீனாட்சியம்மன் கற்சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் உள்ள வைகையாற்றில் 3 அடி உயரமுள்ள கையில் கிளியோடு, பட்டுச்சேலை கட்டியுள்ள மீனாட்சியம்மன் கற்சிலை தண்ணீரில் மூழ்கியபடி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகையாற்றில் குளிக்கச்சென்ற பொதுமக்கள் இந்த சுவாமி சிலை தண்ணீரில் கிடப்பதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால், உடனடியாக தண்ணீரில் இறங்கி 3 அடி உயரமுள்ள மீனாட்சியம்மன் கற்சிலையை மீட்ட பொதுமக்கள் அதை வாடிப்பட்டி வட்டாட்சியர் நவனீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். வைகையாற்றில் தண்ணீர் வரத்து தற்போது அதிகமுள்ள நிலையில் மீனாட்சியம்மன் சிலை கிடைத்துள்ளது.
இச்சிலை மதுரையில் உள்ள தொல்லியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட உள்ளது. விரைவில் சிலை குறித்தும், அதன் தொன்மை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.