செய்தியாளர் - ஐஷ்வர்யா
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலைக் கோவில். தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்ல ஏழு மலைகள் கடந்து செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களில் மட்டும் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
அதில், மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமிக்கு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு மலைகளை ஏறி சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். பல்லாயிரகணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வந்துள்ள நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும், மலை ஏறும்போது 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரு தினங்களில் மட்டும் மூன்று பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
வேலூரை சேர்ந்த தமிழ்செல்வன், கோவையை சேர்ந்த கிரண் மற்றும் தியாகராஜன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராவ், தேனியை சேர்ந்த பாண்டியன் ஆகியோர் கடந்த ஒன்றரை மாதத்தில் உயிரிழந்துள்ளனர். இளைஞர், முதியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
5 பேர் உயிரிழப்பை அடுத்து, வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, இருதய நோய் சம்மந்தப்பட்வர்கள், மூச்சுதிணறல் உள்ளவர்கள், உடல்பருமணாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை பல்லுயிர் பெருக்கம் நிறைந்தது. வனவிலங்குகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ள பகுதியாகும். அதனால், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்லவும், மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சாவலாக உள்ளதை கருத்தில் கொண்டு அனைவரின் நலன்கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.