ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல தனியார் விடுதியில் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம்செய்யச் சென்ற மூன்று கூலித்தொழிளாலிகள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் விடுதியான சத்தியம் கிராண்ட் ரிசார்ட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவு நீர்த்தொட்டி நிரம்பியதால் அதனை சுத்தம்செய்ய வெங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ரஜினியுடன் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன்(51), அவரது அண்ணன் மகன் திருமலை(30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (18), மற்றொரு நவீன் குமார்(14) ஆகிய நான்கு பேரும் சென்றுள்ளனர். அப்போது நவீன் குமார்(14) உணவு வாங்க சென்றுள்ளார். பின்னர் விடுதியில் இருந்த மூவரும் கழிவுநீரை சுத்தம் செய்ய இறங்கியுள்ளனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் ஒருவர்பின் ஒருவராக மூவரும் கழிவு நீர்த்தொட்டியில் விழுந்தனர்.
இதனைக்கண்ட ஒப்பந்ததாரர் ரஜினி அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து உணவு வாங்கச்சென்ற நவீன் குமார் திரும்பிவந்து பார்த்தபோது உடன் வந்தவர்கள் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைக்கண்டு கூச்சலிடவே அருகே இருந்தவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட உதவி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அலுவலர் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் சென்றனர். 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவு நீர்த்தொட்டியில் உடலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கழிவு நீர் முழுவதையும் வெளியேற்றி ஆக்சிஜன் சுவாச கருவி மூலம் கழிவு நீர்த்தொட்டியில் இறங்கி உடலை தேடி ஒவ்வொரு உடலாக மீட்டனர். பின்னர் மூன்று உடல்களையும் உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன்ர். இதனிடையே கூலித்தொழிலாளிகள் உயிர் இழந்தது தொடர்பாக விடுதி உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் முரளி, ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முரளி, ரஜினி ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.