செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
கடந்த மாதம் 6 ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன், சதீஷ், பெருமாள் ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.4 கோடி பணம், நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும், பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் MLA EQ கோட்டாவில் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த டிக்கெட்டை வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைவரிடமும் விசாரணை நடத்திய பின் பெறப்படும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.