திருவண்ணாமலையில் ஆபத்தான நிலையில் உள்ள மூன்று ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் மூட வேண்டும், இல்லையென்றால் நிலத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை கண்டுகொள்ளாத விதமாக, செங்கம் அடுத்த மண்மலை ஊராட்சிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் திறந்தபடியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
‘எந்த நேரத்திலும் குழந்தைகள் அதில் விழுவதற்கு வாய்ப்பும் உள்ளது. இதை கண்டு கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் மூன்று ஆழ்துளை கிணறுகள் மட்டும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இவற்றை விரைந்து மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.