சென்னை தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி வினோதா மற்றும் மகன்கள் நிதின் (6), ருத்ரேஷ் (3.5) ஆகியோருடன் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு (நேற்று முன் தினம் இரவு நடந்தது) சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது தர்காஸ் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த மாடுகள், அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் நான்கு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த தனியார் கல்குவாரி லாரி மோதியதில் சிறுவன் ருத்ரேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். சிறுவன் தவிர மற்றாவர்களுக்கு லேசான காயமென சொல்லப்படுகிறது.
சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், அதன் உரிமையாளர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.