தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 17,18 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. அவை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அந்த ஆய்வு, அறிக்கைகளாக சமர்பிக்கப்பட்டன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு நெல்லையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், சேதத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ‘மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றுக்கான வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அதையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை சீர் செய்ய மத்திய அரசு சார்பாக முதற்கட்ட நிவாரண நிதி வழங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் இரண்டாம் கட்ட நிவாரண நிதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.