சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறை இணைந்து நடத்தும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நடந்த இரண்டாவது ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியினால் ஆடல், பாடல், விளையாட்டு என களைகட்டியது பாண்டி பஜார் வீதி.
சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, மைதானங்களை மட்டுமன்றி வீதியில் விளையாடும் வழக்கத்தையும் குழந்தைகளும் இளைஞர்களும் இழந்துவிட்டனர். உண்மையில் விளையாட்டில் சாதித்த அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் அவர்களின் விளையாட்டை வீதியில் தான் துவங்கி இருப்பார்கள். அப்படியான வீதியே காணாமல் போன சோகம் கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பொதுமக்களுக்கான உடல்நலன் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி - சென்னை காவல்துறை இணைந்து நடத்திவருகிறது. அப்படித்தான் ஆரோக்கியமான வாழக்கை முறையை நோக்கி மக்களை பயணிக்க வைக்கும் நோக்கில் HAPPY STREETS நிகழ்ச்சியை சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜார் வீதியில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையாக மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து நடத்தினர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் மனிதர்களுக்கு இடையிலான உரையாடல் குறைந்து வருவதை உணர்த்தியும், குழந்தைகளுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்களை அதிகப்படுத்தும் நோக்கிலும் நடத்தப்படும் இந்த HAPPY STREET நிகழ்ச்சிக்காக, காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு அந்த சாலை முழுவதும் கிரிக்கெட் zone, Football zone, Badminton zone, சைக்ளிங் zone,
சிலம்பாட்டம், கோலி, பம்பரம், பரமதபதம், நடனம், இளைஞர்களின் பாடல்கள் என மக்களை மகிழ்விக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே அண்ணா நகர் மற்றும் OMR, மயிலாப்பூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் தியாகராய நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வருகை தந்தனர். இருப்பினும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் வருகை தந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நடனமாடியும், அங்கிருந்த விளையாட்டுகளையும் விளையாடியும் பாடல்களை பாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாரத்தின் 5 வாரங்கள் பணியில் இருந்துவிட்டு வார இறுதியில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது, தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என இளைஞர்கள் கூற, பழைய காலத்தில் விளையாடிய விளையாட்டுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என பெரியவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது என தெரிந்தவுடன் வந்ததாகவும் 5 வாரங்களில் முடித்து விடாமல் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் அனைவரும் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைக்கின்றனர்.
விளையாட்டு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஓவியம் வரைவது எப்படி, காகிதங்களை பயன்படுத்தி சிறிய சிறிய விளையாட்டு உபகரணங்கள் எப்படி உருவாக்குவது என்பது குறித்தும் இந்த வீதியில் கற்பிக்கப்படுகிறது. அதேபோல நடைபெறும் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தியாகராயநகரில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில் அடுத்த மூன்று ஞாயிற்றுகிழமைகளிலும் தொடர்ச்சியாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் அதிகளவில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வருவரென ஏற்பாட்டாளர்கள் கணித்துள்ளனர்.