”இனிமேலாவது கூலி சரியா வழங்குங்க”- வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளம் விசைத்தறி தொழிலாளி

”இனிமேலாவது கூலி சரியா வழங்குங்க”- வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளம் விசைத்தறி தொழிலாளி
”இனிமேலாவது கூலி சரியா வழங்குங்க”- வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளம் விசைத்தறி தொழிலாளி
Published on

குடியாத்தம் அருகே கடன் தொல்லை மற்றும் விசைத்தறி தொழில் நலிவு காரணமாக விசைத்தறி தொழிலாளி வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 29 வயதான இளம் விசைத்தறி தொழிலாளி, ஜெயக்குமார். இவருக்கு குமுதா என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 5 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே இன்று காலை ஜெயக்குமார் வீடியோ ஒன்றை பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது அந்த இறுதி வீடியோவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறிக் தொழில் நலிவடைந்து மண்டியில் சரியான கூலி வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால் எனக்கு கடன் சுமை மிக அதிகமாகிவிட்டது. சரிவர விசைத்தறி தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். இனிமேலாவது விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி சரியாக வழங்க வேண்டும். எனது இறுதி ஊர்வலத்திற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

வீடியோ வெளியிட்டுவிட்டு, பணிபுரியும் இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெயக்குமார். இந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளார் அவர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் மற்றும் தொழில் நலிவால் வீடியோவை வெளியிட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக குடியாத்தம் நெசவாளர்கள் குடியாத்தம் RDO அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com