ஆம்பூர் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியில் இருந்தவர்களை தேனீக்கள் கொட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (100 வேலை திட்டம்) சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த தேனீக்கள் பணியில் இருந்தவர்களை கொட்டத்தொடங்கின. இதில் அங்கு இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அருகாமையில் உள்ள நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், 25 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் 15-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.