செய்தியாளர்: ஆனந்தன்
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு நாட்டு படகுகளையும் அவற்றிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை நேற்று அதிகாலை கைது செய்தது. கைதான மீனவர்கள் இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் பாம்பனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிடவும் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.