இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து வருகிறார். விருந்தினர் மாளிகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த நிர்மலா சீதாராமன், மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அவர், காணாமல் போன மீனவர்கள் குறித்து கேட்டறித்தார்.
அப்போது மீனவர்கள், 254 படகுகளில் சென்ற 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஒகி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்மலா சீதாராமனிடம் அளித்தனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்படவில்லை என்றும், போர்க்கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றும் கூறினார்.